பங்குச்சந்தையில் பெரும்பாலோனருக்கு இந்தக் குழப்பம் இருக்கும். நாம் முதலீடு செய்கிறோமா? அல்லது வர்த்தகம் செய்கிறோமா? என்று… இன்னும் இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு தெரியாமலே பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்களும் உண்டு. இங்கு முதலீட்டிற்கும், வர்த்தகத்திற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்வோம்.
இதைப் புரிந்துகொள்ள, முதலில் பங்குச்சந்தையை ஒரு கிரிக்கெட் போட்டியுடன் தொடர்புபடுத்திக் கொள்ளுங்கள். முதலீடு ( Investment) என்பது ஒரு டெஸ்ட் போட்டியை போன்றது. நீண்ட காலத்திற்கு உரியது. வர்த்தகம் ( Trade) என்பது ஒரு T20 போட்டியை போன்றது. குறுகிய காலத்திற்கு உரியது.
மேற்கூறிய உதாரணத்திலிருந்து இவை இரண்டிற்குமான அணுகுமுறையில் உள்ள வித்தியாசத்தை உங்களால் கணித்திருக்க முடியும். இப்போது போட்டியை தொடங்குவோம். முதலீடு மற்றும் வர்த்தகம் யார் வெற்றி பெறுவார்கள் என்று பார்க்கலாம்!
பங்குச்சந்தையில் முதலீடு என்றால் என்ன?
நீண்ட கால நோக்கில் ஒரு பங்கை நீங்கள் வாங்கினால் அது முதலீடு என அழைக்கப்படுகிறது. அதாவது நீங்கள் வாங்கிய நிறுவனம் வளர வளர உங்களின் முதலீட்டின் மதிப்பும் வளரும். இது Passive Income எனப்படுகிறது. நீங்கள் ஓய்வில் இருக்கும் போதும், ஏன் உங்கள் விடுமுறையை அனுபவிக்கும் போதும் கூட உங்கள் முதலீடு இங்கு அதிகரிக்கும். இதை Warren Buffett “நீங்கள் தூங்கும் போதும் பணம் சம்பாதிக்க வழி கண்டுபிடிக்கவில்லை என்றால், நீங்கள் இறக்கும் வரை வேலை செய்வீர்கள்.” என எளிமையாக விளக்கி இருப்பார்.
ராகுல் டிராவிட் டெஸ்ட் போட்டிகளில் நீண்ட இன்னிங்ஸ்கள் ஆடி இருப்பார். அவர் ஆடுகளத்தில் பொறுமையாக இருந்து நீண்ட நேரம் ஆடி நிறைய சாதனைகளை முறியடித்தார். அதைப் போன்று நீண்ட காலத்திற்கு உங்கள் முதலீடுகளை வைத்திருப்பது மிகச் சிறந்த பலனை பெறலாம்.
பங்குச்சந்தையில் வர்த்தகம் என்றால் என்ன?
பங்குச்சந்தையில் வர்த்தகம் என்பது சந்தை விலைகளில் உள்ள ஏற்ற இறக்கங்களை பயன்படுத்தி குறுகிய காலத்தில் லாபம் ஈட்டுவதற்கான ஒரு அதிநவீன கலை. இதில் வர்த்தகர்கள் பொதுவாக சில வினாடிகள் முதல் மாதங்கள் வரையிலான கால நிலைகளில் வர்த்தகத்தில் ஈடுபடுவார்கள்.
வீரேந்திர சேவாக்கின் டி20 ஆட்டம் ஒரு வர்த்தகருக்கு சிறந்த உதாரணம். இதில் அணுகுமுறையானது ஆக்ரோஷமானது மற்றும் விரைவானது. ஒரு டி20 பேட்ஸ்மேனைப் போலவே ஒவ்வொரு நிகழ்விலும் அடித்து ஆடுவதற்கான வாய்ப்புகளை ஒரு வர்த்தகர் தொடர்ந்து தேடுகிறார். இந்த டி20 இன்னிங்ஸில் அடித்து ஆடும்போது தவறான ஷாட் ஆடி அவுட் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதுபோலவே வர்த்தகத்திலும் தவறான முடிவெடுத்து நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. வர்த்தகத்தில் பிழை செய்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதால், இது முதலீட்டை விட அதிக ஆபத்தை கொண்டுள்ளது.
முடிவாக, வர்த்தகத்துடன் ஒப்பிடும்போது முதலீடு செய்வது எளிதானது. ஒரு முதலீட்டாளராக உங்கள் மூலதனத்தை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அதிக சந்தை திறன்கள், Real-Time Analysis, சந்தை பற்றிய சிறந்த அறிவு உள்ள ஒருவர் வர்த்தகத்தை முயற்சி செய்யலாம்.